புதன், 11 ஏப்ரல், 2018

Mental Diarrhoea!!. உங்களுக்கு மனப் போக்கு உண்டா?!


2. வடிவேலு அவர்கள் காமெடி போல சும்மா இருப்பது ரொம்ப கஷ்டம். அதுவும், அகமும் புறமும் சும்மா இருப்பது மிகக் கடினம். ஏன்?

நம் எண்ணங்கள் ஆனது தொடர்ந்து மனத் திரையில் ஓடிக்கொண்டு இருப்பதை இன்று உங்களுக்கு விருப்பம் இருந்தால் உணர்ந்து பார்க்கலாம்.

பயந்தவர்கள் மேற்கொண்டு படிக்க வேண்டாம் என்று எச்சரிக்கை செய்கிறோம்!

பயமா, எனக்கா?
நான் நூறு கிலோமீட்டர் வேகத்தில் வண்டியில் பறப்பவன், குவாட்டர் அடித்தும் அசராதவன், வம்பு சண்டை எனக்கு விருந்து மாதிரி, நான் பார்க்க தான் பொண்ணு, ஆனா ரெண்டு ஆண்களுக்கு சமம், அன் டேம்ட், வைல்ட் என்பவர்கள் கூட தியானம் என்றவுடன் சற்று ஜெர்க் அடிப்பதை கண் கூடாகக் கண்டு இருக்கிறேன் என்பதால் இந்த செல்ல எச்சரிக்கை.

இன்றைய பயிற்சி:
கொஞ்சம் தனிமையில் அமரவும்.
அது சர்ச்சோ, கோயிலோ, பேருந்தில் ஜன்னலோர இருக்கையோ, ஆஃபீஸ் கேன்டீனோ, வகுப்பில் கடைசி பென்சோ, வீட்டில் பாத்ரூமோ எதுவாகவும் இருக்கலாம். இடம் பொருட்டு இல்லை. நீங்கள் தான்.

 உங்களுக்கு தோதான ஒரு இடம் கண்டடைந்து, அமர்ந்து, கண்கள் மூடி
இருக்கவும்.

உடனே, உங்கள் மனதில் முதுகை விறைப்பாக வைக்க வேண்டுமா அல்லது நன்கு சாய்ந்து அமரலாமா? என்று கேள்வி எழுகிறதா?
 அதுவே உங்கள் முதல் எண்ணம்.

பத்தே பத்து நிமிடங்கள் கண் மூடி, உங்கள் மன த் திரையில் ஓடும் எண்ணங்களைத் தடுக்காமல் வேடிக்கை பாருங்கள்.
உதாரணமாக,
மாணவர்கள், அடுத்து வரும் தேர்வு பற்றி!, நண்பிகள் அலைபேசி டாப் அப், புரியாத பாடத்தில் கேள்வி வந்தால் என்ன செய்வது என்றோ;

அலுவலர்கள், முடிக்க வேண்டிய வேலை, யாரை போட்டு கொடுப்பது, ப்ரோமோஷன் பற்றியோ;

முதலாளிகள்,மோடி தொல்லைகள், ஜி.எஸ்.டி., வருமான வரி, லாபம், விரிவாக்கம் பற்றியோ,

பெண்கள், புது டிசைன் உடைகள், புருவம் திருத்துதல், பாய் பிரண்டுகள் பற்றியோ,

திருமணம் ஆனவர்கள், மாமியார் தொல்லை, மச்சினி, பிள்ளை, நகை, சிறுவாடு பற்றியோ எழும் எண்ணங்களில் முழ்கி விடாமல் கவனிக்கவும். முழ்கி, அதிலேயே ரத்தம் கொதித்து அரைமணி நேரம் கடந்து கண் திறந்தாலும் பரவாயில்லைதான்.

அதாவது, உங்கள் எண்ணங்கள் ஒரு சரம் போல தொடர்ந்து, ஒன்று மாற்றி ஒன்று வருவதைப் பார்த்தீர்கள், உணர்ந்தீர்கள் என்றால், சோதனை வெற்றிதான்.

இது தான் Mental Diarrhoea!!!

(தொடரும்...)

சனி, 7 ஏப்ரல், 2018

த்யானம் ! ஒரு எளிய அறிமுகம்


த்யானம் என்றால் என்ன? சயின்ஸ் வளர்ந்த இந்த நூற்றாண்டில்
த்யானம் தேவையா?
ஆன்மிகமும் மதமும் ஒன்றா?
ஆதி கேள்விகளான இவற்றிற்கு விடை காண விழைந்த பயணத்தில் கிடைத்ததை பகிர்கிறேன். 
தவறிருந்தால் திருத்துங்கள்!

பிடித்தால்?
வாங்க, தியானம் பழகலாம்!!

த்யானம் தெரிய நம் மனம், அதன் இயக்கம் பற்றி அடிப்படை புரிதல் தேவை.

கர்ப்பிணிகள், பலகீன இதயம் உள்ளவர்கள்  பயப்பட வேண்டாம்!
மிக எளிய உதாரணம் மூலம் பார்க்கலாம். முதலில் Mental Diarrhoea.

டயரியா, வயிற்றுப் போக்கு தெரியும். அதென்ன, மென்டல் டயரியா?
மனப் போக்கா?! என்றால், ஆம் என்பதே பதில்.

மனம் என்பதன் இணைச் சொல் (synonym), எண்ணம். எண்ணங்களே நம்மை உருவாக்கி, வழி நடத்துகின்றன! ஆனால் அந்த எண்ணங்கள் நம் கட்டுப்பாட்டில் இருக்கிறதா என்றால், இல்லை என்பதே பதில்.

ஓரு சோதனை செய்யலாம், கண் திறந்து தான்!
சரியாக ஒரு நிமிடம் ஒரு கடிகார முள் நகர்தலை கவனியுங்கள். அல்லது, அலைபேசி stop watch ல் 60 வினாடிகள் ஓடுவதை உற்று கவனிக்கவும்.

கவனித்து விட்டீர்களா?

முழுமையாக கவனித்தவர்கள், முதுகில் ஷொட்டு வைத்துக் கொள்ளலாம்.

கடிகார முள் கவனிக்கும் போது எத்தனை பேருக்கு எண்ணங்கள் வந்தது? அதாவது, வீட்டு வேலை, மனைவி, நண்பர்கள், குழந்தை, ஹோம் ஒர்க், ரெகார்ட் நோட், சினிமா, IPL, பிடித்த பாட்டு, வெண்குழல் வத்தி அட! சிகரெட்டு தாங்க, ஸ்கூல், ரிசல்ட், பகார்டி, பிட்டு பட நடிகை என்று எண்ணங்கள் வந்திருந்ததா?

எத்தனை தினுசான எண்ணங்கள் வந்தது என்பதை பதிவிட்டால் நன்று.

மனதை உணர முதல் படி எடுத்து வைத்துவிட்டீர்கள். 

மகிழ்ச்சி.

(தொடரும்...)

செவ்வாய், 20 மார்ச், 2018

காவேரி குளியல் !!


வாசிப்பாளர்களுக்கு ஒரு செல்ல எச்சரிக்கை!

இது நடிகை காவிரியின் குளியல் பற்றியது விவரிப்புஅல்ல!!.
நீண்ட வருடங்களுக்குப் பின் காவிரி ஆற்றில் பலமணி நேரம் நீந்தி, மிதந்து, முங்கு நீச்சல் அடித்து, குளித்து வரும் போது சின்ன வயது ஞாபகங்கள் பீறிட்டு வந்தது.

இரண்டாம்பு, மூணாம்பு படிக்கும் போது அப்பா விரல் பிடித்து காலையிலேயே குளத்துக்கு கிளம்பிவிடுவோம். அப்பாவின் நண்பர்கள், பிள்ளைகளுடன் வருவார்கள். ஐப்பசி, மார்கழி தண்ணீர் சிலீர் என்று இருக்கும். மதியம் கொஞ்சம் வெது வெது.

நீச்சல் தெரியாதா? என்று கேட்டு காட்டுச் சிரிப்புடன் அப்படியே அலேக்காகத் தூக்கி தண்ணீரில் எறிவர்கள். பக், பக் என தண்ணீர் குடித்து, கை வீசி, கால் உதைத்து மேலே வந்து, பின் மூழ்கும் போது தூக்கி பி.எஸ். வீரப்பா சிரிப்பு சிரிப்பார்கள். கண் சிவந்து, மூக்கு ஒழுகி, புரைக்கேறி இருமுவதை கண்டபின் நீச்சல் சொல்லித் தருவார்கள். என்னா ஒரு கொலவெறி!!

வயிற்றில் கை வைத்து கை, கால் உதைக்கச் சொல்வார்கள். பின், கீழுள்ள படியைப் பிடித்து கால் மட்டும் அடிக்கும் பயிற்சி. அப்பா துவைத்து, அலச எடுத்து வந்த மூத்திரப் போர்வையை நாலாக மடித்து, தண்ணியில் போட்டு கொசுவி கை கொள்ளாமல் பிடித்தால், அது ஒரு உப்பிய பலூன் போல இருக்கும். அப்படியே இறுக்கிஅணைத்த படி ஒரு அரைவட்டமாக படியில் இருந்து கிளம்பி இரண்டடி நீந்திச் சென்று, பயந்து, பின் படிக்கே வந்து விடிவேன். அதற்குள் போர்வை ஊறி முழ்கி விடும். கூடவே நானும்.

அம்மாவும், அத்தைகளும் சமைத்து முடித்து, அக்கடாவென்று கடமை முடிந்த திருப்தியில், தலையில் வழிய, வழிய எண்ணெய் வைத்து, சிகக்காய் பாக்கெட்டுடன், துவைக்க வேண்டிய துணிகளை கழுத்தில் மாலையாய் போட்டுக்கொண்டு, "யக்கா, குளிச்சுட்டு வரலாமா?" என்று அக்கம் பக்கம் நண்பிகளை உசுப்பிக் கிளம்புவார்கள். குளக்கரையில் பல வீடுகளின் அந்தரங்கள் துவைத்து அலசப்படும், நம் வீட்டையும் சேர்த்து. சனி, ஞாயிறு நாட்களில்  அவர்களுடன் ப்ளீஸ்மா, ப்ளீஸ்மா என்று கெஞ்சி, கொஞ்சி இரண்டாம் முறையாக குளிக்க கிளம்பி விடுவேன். நீச்சலடிக்க, போர்வையை விட பாவாடை சிறந்த தேர்வு. எளிதாக கையில் சேர்த்து பிடிக்க முடியும். ஆனால், தண்ணீரில் போட்ட அப்பளம் போல பொசுக்கென்று முழ்கிவிடும்.

சற்றே வளர்ந்த பின் நண்பர்கள், வேல்முருகன், சுப்புராயுலு, கோபி, புகழேந்தி உடன் மதிய வேளையில் யாருக்கும் தெரியாமல் குளத்துக்கு கிளம்பி விடுவோம். நாங்கள் படியில் குளிக்க, லோக்கல் வஸ்தாதுகள் குளம் நடுவே உள்ள மெர்குரி விளக்கு நடப்பட்ட சிமெண்ட் கட்டைக்கு நீந்தி, அதில் ஏறி டைவ் அடிப்பார்கள். வாய்ப்பு உள்ள சிலர் டிராக்டர் ட்யூப்புடன் (அப்போது கார்கள் ரொம்ப கம்மி) வந்து இக்கரையில் இருந்து அக்கரைக்கு மிதந்து, வயிற்று எரிச்சலைக் கிளப்புவர்கள். நாங்களும் போட்டி போட்டு டைவ் அடிக்க முயற்சித்து, முதுகில் பொளேர் என்று நீரடி வாங்குவோம். வீட்டுப் பாடம் முடிக்கவிட்டால், கைவிரித்து, நாக்கு கடித்து, முழு பலத்துடன் முதுகில் அறையும் கணக்கு வாத்தியார் அடியை போல செம்மையாக வலித்து, விறு விறுக்கும். கண் கலங்கியும், வலிக்காதது போல மூஞ்சை விறைப்பாக வைத்துக் கொண்டாலும் நண்பர்களின் கேலி அதைவிட வெறியேற்றும்.

"பாக்றியா, இப்ப பாக்கறியா" என்று உசுப்பேறி அடுத்த டைவ்விற்கு அரை மனதுடன், வலி தாங்க முடியுமா என்று எண்ணிக் கிளம்பும் போது, தெய்வம்போல பக்கத்து வீட்டு அண்ணனின்    "டேய்! சீக்கிரமா வரலன்னா, முதுகுத்தோல் பிஞ்சுரும்னு உங்க அம்மா சொல்லுச்சு" என்ற அன்பான அழைப்பை உடனே ஏற்று, நண்பர்களிடம் "டேய்! என்னையவா கிண்டல் பண்ற, நாளைக்கு உன்ன வச்சிக்கிறேன்டா!" என்று வீர சபதமிட்டு விடு ஜூட் என்று ஓடி விடுவேன்.

என் மகன் சந்தோஷுக்கு காவேரி குளியல் , கொள்ளை சந்தோஷம். வியப்பில் விழி விரிய, கண்ணில் குஷி மின்ன குளித்தான். "என்னப்பா, பாத்ரூம்ல குளிச்சா வேர்க்குது, இங்க வேர்க்கவே இல்லியே!", " ஒரே ஜாலியா இருக்குப்பா, தெனைக்கும் வருவோமா" என்ற விசாரிப்புகள் வேறு. ஸ்கூல் கதை, ஸ்கூல்வேனில் நடந்த சம்பவங்கள் என்று ஜாலியாக குளித்தபடியே கதைத்தோம்.  வருஷமெல்லாம் காவேரி ஓடினால்தான் என்ற மெலிதான ஏக்கம் எழுந்ததை தவிர்க்க முடியவில்லை.

பிள்ளைகளுடன் பேசுங்கள்!!



கிளுகிளுப்புடன் கடலை போட டிப்ஸ் எதிர்பார்ப்பவர்கள் அர்ஜென்டாக பின் வாங்கவும். 

தனியர்களாக இருந்தாலும் வாசிக்கலாம்தான். பின்னால் ஒரு நாள் பயன்படும்!

மழையில் வீட்டில் அடைந்த ஒரு நாள், வாயை வைத்துக் கொண்டு சும்மா இருக்காமல் நாலாவது படிக்கும் என் பையனிடம், "அம்மா  பற்றி உனக்குப் பிடித்த அஞ்சு பாயிண்ட் எழுது" என்றேன். மனைவி முறைத்தாள். 

என்னைத்தான்.

பையன் போட்டோவுக்கு போஸ் கொடுக்கும் புதுக் கவிஞர் போல, பேனாவை வாயில் கவ்வி, பலமாக யோசித்தவுடன் எனக்கு வயறு கலங்கியது.

தேவை இல்லாமல் ஒரு பிரச்சினையை நானே கிளப்பி விட்டேனோ! வெளியே நல்ல மழை. தப்பிக்கவும் வழி இல்லை. மைக் டைசனிடம் மாட்டிய டக்ளஸ் போல விழித்தேன். சும்மாவே நல்லா காய்ச்சுவா, இன்னைக்கு கைமா தானா!

ம்! சாட்சிக்காரனிடம் தாஜா செய்வோம் என்று பையனைப் பார்த்தேன். சூர்யா ட்யூப் லைட் விளம்பரதாரர் போல என்னைப்பார்த்து சிரித்தான். விதியும் தான். "இந்தாங்கப்பா, படிப்பா" என்றான்.

அம்மா பாயிண்ட்ஸ்:
1. அம்மா, எப்ப பார்த்தாலும் ஹோம் ஒர்க் எழுதச் சொல்லுவாங்க. 

2. அம்மா, எப்பவும் என்னை திட்டிக்கிட்டே இருப்பாங்க.

3.  நான் எது செய்தாலும் அதுல தப்பு கண்டுபுடிச்சு கரெக்ட் செஞ்சுகிட்டே இருப்பாங்க.

4. கம்ப்யூட்டர்ல கேம்ஸ் விளையாட விடவே மாட்டாங்க.

5. சூப்பரா, எனக்கு புடிச்சத்தை சமைச்சு தருவாங்க. எனக்கு உடம்பு சரியில்லைன்னா ஹோம் ஒர்க் எழுத வேண்டாம்னு சொல்லிடுவாங்க.

கடைசி பாயிண்ட் பார்த்ததும் தான் எனக்கு உயிர் வந்தது. " எவ்வளவு மரியாதையா எல்லா பாயிண்ட்லயும் "ங்க" போட்டு எழுதியிருக்கான் பாரேன்" என்று வழிந்தேன்.

ஸ்கட் ஏவுகணை போல , " அப்படியே உங்க அப்பாவை பத்தியும் அஞ்சு பாயிண்ட் எழுதறதுதானே" என்றாள்.

சும்மா இல்லாம, வேலி ஓணானை வேட்டியில் விட்டது போல விழித்தேன்.

அப்பா பாயிண்ட்ஸ்.
1. அப்பா எப்பவும் காலேஜ் வேலையா இருப்பாங்க.

2. டெய்லி லேட்டா வருவாங்க, வந்தாலும் போனும், கம்ப்யூட்டருமா இருப்பாங்க.

3. ஹோம் ஒர்க் பத்தி கேக்கவே மாட்டாங்க.

4. அப்பா என் கூட நெறைய நேரம் வெளையாடனும் ஆசையா இருக்கு.

கிச்சனில் ஒலித்த இடி சப்தம் கேட்டு, ஐந்தாவது பாயிண்ட் எழுத்துவதுற்குள் பையனின் கையை பிடித்தேன், "போதுண்டா, நெறைய எழுதினா கை வலிக்கும்" என்றேன் பயப் பரிவாக.

"நான் மட்டும் அவன் கிட்ட கெட்ட பெயர் வாங்கணும்,  நீங்க குட் பாயா இருப்பிங்களா? இனிமே அவன் ஹோம் ஒர்க் உங்க பொறுப்பு" என்ற மனைவியை, அம்மா  பார்த்த அமைச்சர் போல, பயம் கலந்த பரிதாபத்துடன் பார்த்தேன்.

ஆனால், யோசிக்கையில் நாம் பிள்ளைகளுடன் செலவிடும் நேரம் மிகக் குறைவே. அவர்களிடம் பேசுவது என்றால், படிச்சியா, சாப்பிடு, கேம்ஸ் போதும், தூங்கு, எழுந்திரு, விளையாண்டது போதும் வீட்டுக்கு வா, டீவி ஆஃப் பண்ணு, என்ன ஸ்னாக்ஸ் வேணும், டைரி சைன் வாங்கினியா போன்ற ஒன் லைனர்களே.

நம் குடும்ப வரலாறு, சுவாரசியமான சம்பவங்கள், பிள்ளைகளின் நண்பர்கள், அவர்கள் ஸ்கூல் ஜோக்ஸ், அவர்களின் கவலைகள்! ( மழை போதும்பா, நெறைய ஹோம் ஒர்க் தராங்க, கை வலிக்குது), படிக்க கதை புத்தகங்கள், விளையாட்டு எனப் பல தளங்களில் அவர்களை நாம் உணரலாம். அவர்கள் உலகில் நண்பர்களாக நாமும்  சஞ்சரிக்க இது ஒரு வாய்ப்பு.

பின்குறிப்பு: இந்த உரையாடல்கள் நிகழ்ந்தது 2012ல்.

இதைப் பதிவிடும் முன் மனைவியிடம் காட்ட,
"திரும்பவும் மொதல்லேருந்து படிங்க. இப்பவும் அப்படியேத்தான் இருக்கீங்க!!" என்றாள் மனைவி.

"வெளிய மழை விட்டிருக்கும்ல!".



தாவர இனப்பெருக்கத்துறை கலைச்சொல் அகராதி (1)


சபேசன் தாயுமானவன் & சுகன்யா*

துணைப் பேராசிரியர் , * முதுகலை முதலாமாண்டு மாணவி

மரபியல் மற்றும் பயிர் சூலாக்கத்துறை, வேளாண் புலம் , அண்ணாமலைப் பல்கலைக்கழகம்
(19.03.2018)

1. மகரந்தச் சேர்க்கை (Pollination)
மலரின் மகரந்தப் பையிலிருந்து மகரந்தத்துகள்கள் சூல்முடியில் ஒட்டுவது மகரந்தச் சேர்க்கை எனப்படும்.

2. தன் மகரந்தச் சேர்க்கை (Self pollination)
ஒரு மலரின் சூல்முகட்டில் அல்லது சூல்முடியில் அதன் மகரந்தத் துகள்களே ஓட்டுவது தன் மகரந்தச் சேர்க்கை ஆகும்.

3. அயல் மகரந்தச்சேர்க்கை (Cross pollination)
ஒரு மலரின் சூல்முடியில் மற்றொரு மலரின் மகரந்தம் ஒட்டுவது அயல் மகரந்தச்சேர்க்கை ஆகும். இது அலீல்கள் மாறுபடுவதை ஊக்குவிக்கும். ஒரு மலரின் சூல்முடியில் சேரும் மகரந்தம், அதே செடியின் வேறு ஒரு மலரிலிருந்து வருமானால் அது கெய்டனோகமி (geitanogamy) எனப்படும்.

4. பூவிரி இணைதல் (Chasmogamy)
இருபால் மலர்களில், மொட்டுக்கள் மலர்ந்து விரியும் முன்னரே, தன் மகரந்தச் சேர்க்கை நடைபெறுவது பூவிரி இணைத்தல் எனப்படும். எ .கா . நெற்பயிர்.

5. மலராது இணைத்தல் (Cleistogamy)
சில இருபால் மலர்கள் எப்பொழுதும் மலர்ந்து விரியாது. இந் நிலையில் நிகழும் தன் மகரந்தச் சேர்க்கையே, மலராது இணைத்தல் எனப்படும். எ .கா . கோதுமை.

6. சமகால இணைவு (Homogamy)
ஒரு இருபால் மலரில், ஆணகமும், பெண்ணகமும் ஒரே காலத்தில் முதிர்ச்சி அடைவது சம கால இணைவு ஆகும்.

7. ஆண் மலட்டுத்தன்மை (Male sterility)
ஒரு மலரின் ஆணகத்தில் உள்ள மகரந்தத் தூள் ஆற்றலற்று இருப்பது ஆண் மலட்டுத்தன்மை ஆகும்.

8. சேர்க்கையிலா இனப்பெருக்கம் (Apomixis)
இரு பால் சேர்க்கை நிகழாமலேயே கரு உருவாவது, சேர்க்கையிலா இனப்பெருக்கம் எனப்படும்

9. ஒருபால் பூ (Unisexual flower)
ஒரு மலரில் ஆணாகமோ அல்லது பெண்ணகமோ மட்டும் இருப்பின் அது ஒருபால் பூ எனப்படும்.

10. இருபால் பூ (Bisexual flower)
ஒரே மலரில் ஆணகம், பெண்ணகம் என இரு பால் உறுப்பும் இருப்பின் அது இருபால் பூ எனப்படும்.

11. இருகால முதிர்வு (Dichogamy)
ஒரு மலரில் ஆணகமும், பெண்ணகமும் வெவ்வேறு காலத்தில் முதிர்ச்சி அடைவது இருகால முதிர்வு ஆகும்.

12. ஆணகம் முன்முதிர்தல் (Protandry)
ஒரு மலரிலோ அல்லது செடியிலோ, ஆணகம் கருவாகத்திற்கு முன்னரே முதிரும் தன்மை கொண்டிருப்பது ஆணகம் முன்முதிர்தல் எனப்படும்.இது அயல் மகரந்தச் சேர்க்கையை ஊக்குவிப்பதன் மூலம் அலீல்கள் வேறுபடுவதை அதிகரிக்கும். எ .கா . மக்காச்சோளம்.

13. சூலகம் முன்முதிர்தல் (Protogyny)
ஒரு மலரிலோ அல்லது செடியிலோ, ஆணகத்திற்கு முன்பே பெண்ணகம் முதிர்ச்சி அடைந்தால் அது சூலகம் முன்முதிர்தல் எனப்படும். எ .கா . கம்பு

14. சூல்தண்டு மாறுபடுதல் (Heterostyly)
ஒரே செடியின் பூக்களில், சூல் தண்டின் (style) நீளம் மாறுபட்டு இருப்பது சூல்தண்டு மாறுபடுதல்
எனப்படும். எ .கா . கத்திரிபூக்களில் நீண்ட சூல்தண்டு, மத்திம நீள சூல்தண்டு, குன்றிய சூல்தண்டு மற்றும் போலி சூல்தண்டுகள் காணப்படும். இதில், நீண்ட மற்றும் மத்திம நீள சூல்தண்டுள்ள பூக்கள் மட்டுமே காயாகும்.

15. தற்கருத்தடை (Herkogamy)
சில இருபால் பூக்களில், தன்மகரந்தச் சேர்க்கையை தடுத்து அயல் மகரந்தச் சேர்க்கையை ஊக்குவிக்கும் வகையில், சூல்முடியை ஹயலின் சவ்வு மூடி இருத்தல் தற்கருத்தடை எனப்படும்.
எ .கா .பான்சி , எருக்கு .

16. ஆணகம் நீக்கல் (Emasculation)
ஒரு செடியிலோ அல்லது மலரிலோ ஆணகம் (மகரந்தப் பை) அகற்றப்படுவது ஆணகம் நீக்குதல் எனப்படும்.]

17. இனக்கலப்பாக்கல் (Hybridisation)
ஒரு தாவரத்தில், வேறுபட்ட இரு இனத்துள் கலப்பு செய்வது இனக்கலப்பாக்கம் எனப்படும். இனக்கலப்பாக்கத்தின் மூலம் வீரிய ஒட்டு ரகங்களை (ஹைபிரிட்) உருவாக்க முடியும்.

பயிர் ரகங்கள் பாதுகாப்பு சட்டம் (பாகம்- 2)

பயிர் ரகங்கள் பாதுகாப்பு சட்டம் 2 பயிர் ரகங்கள் பாதுகாப்பு மற்றும் விவசாயிகள் உரிமை சட்டம் (பாகம்- 2) இதற்கு தனியாக புதியதொரு சட்டம்...