வாசிப்பாளர்களுக்கு ஒரு செல்ல எச்சரிக்கை!
இது நடிகை காவிரியின் குளியல் பற்றியது விவரிப்புஅல்ல!!.
நீண்ட வருடங்களுக்குப் பின் காவிரி ஆற்றில் பலமணி நேரம் நீந்தி, மிதந்து, முங்கு நீச்சல் அடித்து, குளித்து வரும் போது சின்ன வயது ஞாபகங்கள் பீறிட்டு வந்தது.
இரண்டாம்பு, மூணாம்பு படிக்கும் போது அப்பா விரல் பிடித்து காலையிலேயே குளத்துக்கு கிளம்பிவிடுவோம். அப்பாவின் நண்பர்கள், பிள்ளைகளுடன் வருவார்கள். ஐப்பசி, மார்கழி தண்ணீர் சிலீர் என்று இருக்கும். மதியம் கொஞ்சம் வெது வெது.
நீச்சல் தெரியாதா? என்று கேட்டு காட்டுச் சிரிப்புடன் அப்படியே அலேக்காகத் தூக்கி தண்ணீரில் எறிவர்கள். பக், பக் என தண்ணீர் குடித்து, கை வீசி, கால் உதைத்து மேலே வந்து, பின் மூழ்கும் போது தூக்கி பி.எஸ். வீரப்பா சிரிப்பு சிரிப்பார்கள். கண் சிவந்து, மூக்கு ஒழுகி, புரைக்கேறி இருமுவதை கண்டபின் நீச்சல் சொல்லித் தருவார்கள். என்னா ஒரு கொலவெறி!!
வயிற்றில் கை வைத்து கை, கால் உதைக்கச் சொல்வார்கள். பின், கீழுள்ள படியைப் பிடித்து கால் மட்டும் அடிக்கும் பயிற்சி. அப்பா துவைத்து, அலச எடுத்து வந்த மூத்திரப் போர்வையை நாலாக மடித்து, தண்ணியில் போட்டு கொசுவி கை கொள்ளாமல் பிடித்தால், அது ஒரு உப்பிய பலூன் போல இருக்கும். அப்படியே இறுக்கிஅணைத்த படி ஒரு அரைவட்டமாக படியில் இருந்து கிளம்பி இரண்டடி நீந்திச் சென்று, பயந்து, பின் படிக்கே வந்து விடிவேன். அதற்குள் போர்வை ஊறி முழ்கி விடும். கூடவே நானும்.
அம்மாவும், அத்தைகளும் சமைத்து முடித்து, அக்கடாவென்று கடமை முடிந்த திருப்தியில், தலையில் வழிய, வழிய எண்ணெய் வைத்து, சிகக்காய் பாக்கெட்டுடன், துவைக்க வேண்டிய துணிகளை கழுத்தில் மாலையாய் போட்டுக்கொண்டு, "யக்கா, குளிச்சுட்டு வரலாமா?" என்று அக்கம் பக்கம் நண்பிகளை உசுப்பிக் கிளம்புவார்கள். குளக்கரையில் பல வீடுகளின் அந்தரங்கள் துவைத்து அலசப்படும், நம் வீட்டையும் சேர்த்து. சனி, ஞாயிறு நாட்களில் அவர்களுடன் ப்ளீஸ்மா, ப்ளீஸ்மா என்று கெஞ்சி, கொஞ்சி இரண்டாம் முறையாக குளிக்க கிளம்பி விடுவேன். நீச்சலடிக்க, போர்வையை விட பாவாடை சிறந்த தேர்வு. எளிதாக கையில் சேர்த்து பிடிக்க முடியும். ஆனால், தண்ணீரில் போட்ட அப்பளம் போல பொசுக்கென்று முழ்கிவிடும்.
சற்றே வளர்ந்த பின் நண்பர்கள், வேல்முருகன், சுப்புராயுலு, கோபி, புகழேந்தி உடன் மதிய வேளையில் யாருக்கும் தெரியாமல் குளத்துக்கு கிளம்பி விடுவோம். நாங்கள் படியில் குளிக்க, லோக்கல் வஸ்தாதுகள் குளம் நடுவே உள்ள மெர்குரி விளக்கு நடப்பட்ட சிமெண்ட் கட்டைக்கு நீந்தி, அதில் ஏறி டைவ் அடிப்பார்கள். வாய்ப்பு உள்ள சிலர் டிராக்டர் ட்யூப்புடன் (அப்போது கார்கள் ரொம்ப கம்மி) வந்து இக்கரையில் இருந்து அக்கரைக்கு மிதந்து, வயிற்று எரிச்சலைக் கிளப்புவர்கள். நாங்களும் போட்டி போட்டு டைவ் அடிக்க முயற்சித்து, முதுகில் பொளேர் என்று நீரடி வாங்குவோம். வீட்டுப் பாடம் முடிக்கவிட்டால், கைவிரித்து, நாக்கு கடித்து, முழு பலத்துடன் முதுகில் அறையும் கணக்கு வாத்தியார் அடியை போல செம்மையாக வலித்து, விறு விறுக்கும். கண் கலங்கியும், வலிக்காதது போல மூஞ்சை விறைப்பாக வைத்துக் கொண்டாலும் நண்பர்களின் கேலி அதைவிட வெறியேற்றும்.
"பாக்றியா, இப்ப பாக்கறியா" என்று உசுப்பேறி அடுத்த டைவ்விற்கு அரை மனதுடன், வலி தாங்க முடியுமா என்று எண்ணிக் கிளம்பும் போது, தெய்வம்போல பக்கத்து வீட்டு அண்ணனின் "டேய்! சீக்கிரமா வரலன்னா, முதுகுத்தோல் பிஞ்சுரும்னு உங்க அம்மா சொல்லுச்சு" என்ற அன்பான அழைப்பை உடனே ஏற்று, நண்பர்களிடம் "டேய்! என்னையவா கிண்டல் பண்ற, நாளைக்கு உன்ன வச்சிக்கிறேன்டா!" என்று வீர சபதமிட்டு விடு ஜூட் என்று ஓடி விடுவேன்.
என் மகன் சந்தோஷுக்கு காவேரி குளியல் , கொள்ளை சந்தோஷம். வியப்பில் விழி விரிய, கண்ணில் குஷி மின்ன குளித்தான். "என்னப்பா, பாத்ரூம்ல குளிச்சா வேர்க்குது, இங்க வேர்க்கவே இல்லியே!", " ஒரே ஜாலியா இருக்குப்பா, தெனைக்கும் வருவோமா" என்ற விசாரிப்புகள் வேறு. ஸ்கூல் கதை, ஸ்கூல்வேனில் நடந்த சம்பவங்கள் என்று ஜாலியாக குளித்தபடியே கதைத்தோம். வருஷமெல்லாம் காவேரி ஓடினால்தான் என்ற மெலிதான ஏக்கம் எழுந்ததை தவிர்க்க முடியவில்லை.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக